Pages

Thursday, 26 December 2013

இருக்கும் இடத்தை விட்டு…..


நல்ல சேமிப்புடன் கூடிய சம்பளம், தரமான வாழ்க்கை, குறைந்தது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம் என்றால் நமது குடும்பத்தினையும், நட்பினையும் பிரிந்து இருப்பதற்கு நம்மால் சமாதானம் செய்து கொள்ள முடியம்.

‘கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது போல் முறையான கல்வித்தகுதி, அதற்கேற்றாற் போல் வேலை, தகுந்த விசா, ஒப்பந்தத்துடன் வருபவர்களுக்கு இவ்விடம் சொர்க்கம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.




இந்த பதிவு இதில் ஏதேனும் அல்லது இவை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களைப்பற்றியது அல்ல. இவை எல்லாம் என்னவென்றே தெரியாத ஒரு சாரார் இங்கு வளைகுடா நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை.




சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவரவர்களின் தகுதிற்கேற்பவோ, அதிலும் கூடுதலாகவோ ஏதாவது ஒன்று கிடைத்துக் கொண்டிருந்தது, ஆனால் தற்பொழுது இங்கு காணும் 90% தொழிலாளர்களின் வாழ்க்கை முறை மேற்கண்ட ஒன்றுமே இல்லாதது. நடைபிண வாழ்க்கை. சம்பளமோ அதிகமானோர்க்கு சொற்பம் (இந்திய ரூபாயில் அதிகபட்சம் 15,000 ), அதில் இங்கு வருவதற்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவேண்டிய கட்டாயம், புறாக்கூண்டு அறைகளில் அடைக்கலம், சுகாதாரமற்ற உணவு, குறைந்தது 12-14 மணி நேர உழைப்பு, இவை எல்லாவற்றிக்கும் மேலாக தொழிலாளர் நலமின்மை, அதிலும் குறிப்பாக வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் நேரிடும் சொல்லவொண்ணாத் துயரங்கள். கண்டிப்பாக இவற்றையெல்லாம் அவர்கள் அங்கு நேரிட்டிருக்க மாட்டார்கள், புதிதாக வருபவர்களுக்கு அதிர்ச்சியாகவும், விடுமுறை முடிந்து வருபவர்களுக்கு நரகமாகவும் தோன்றும்.




எது இவர்களை வரவைக்கிறது? பெரும்பாலும் தெரிந்து கொண்டே எதற்காக வர வேண்டும்? நமது நாட்டில் கண்டிப்பாக நிலைமை இவ்வளவு மோசம் கிடையாது என்றே நம்புகிறேன்.

புலம்பெயர்தல் மூலமாக இவர்கள் நேரிடும் இன்னல்களும், இவர்களால் இவர்கள் சூழ்ந்தவர்கள் இழப்பதும் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டுள்ளது என்பதுதான் அதிலும் பெரிய கொடுமை.

இவர்கள் இங்கு செய்யும் வேலைகளைனைத்தும் நமது ஊரில் இவர்கள் செய்யத் தயங்கியவை. செய்யத்தயங்குபவை, ஆனால் இங்கோ இவர்கள் வேலை செய்யும் விதமோ நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். 

  • கட்டிடத் தொழிலில் கடும் வெயிலிலும் நீண்ட நேர வேலை. 
  • துப்புரவுத் தொழிலில் விடியற்காலையில் தொடங்கி இரவு வரை ஓய்வின்றி வேலை. 
  • அலுவலக கடைநிலை ஊழியர்கள் என்றால் விடுப்பில்லாத (பெரும்பாலும்) வேலை. 
  • ஓட்டல்களில் நடு இரவு வரை.
  • வீட்டு வேலையில் உள்ள பெண்களுக்கு அடிமை வாழ்க்கையும், கூடவே நேரிடும் பாலியல் அவலங்களும். 
  • மற்றும் இதில் விட்டுப் போன இதர அங்கீகரிப்படாத துறைகளில் உள்ள சிரமங்கள்.






பெரும்பாலும் ஊரில் செய்த வேலையினையே இங்கேயும் செய்பவர்கள் தப்பித்துக்கொண்டார்கள், கொண்டிருக்கின்றார்கள். அதில்லாமல் பணம் மட்டுமே குறிக்கோளாக எதையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று வருபவர்கள்தான் இப்படி சிக்கிக் கொள்கிறார்கள்.




இதே இவர்கள் மீண்டும் நாடு திரும்பியால் அப்படியே நேர்மாறாக செயல்படுவது என்றால் யாரை குறை கூறுவது? அயல் நாட்டில் செய்வதனை நம் நாட்டில் செய்ய தடுப்பது எது? இவர்கள் போன்றவர்களால் தான் நமது நாட்டில் மேலே பட்டியல் இட்ட வேலை செய்பவர்களுக்கு தட்டுப்பாடும், அதில் ஏற்பட்டிற்கும் கனவிலும் கண்டிராத கூலி உயர்வும் என்றால் மிகையல்ல. சரி நம்முடைய அரசு ஏதாவது உதவுமா என்றால்? அதுவும் இல்லை.
  



இங்கு தேனாறும் பாலாறும் ஓடுவது போல் எப்பொழுதும் ஒரு மாயையினை உண்டாக்கிக் கொண்டிருப்பது யார்? வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையினை தொலைத்து விட்டு, அடைய வேண்டிய லட்சியத்தினையும் அடையாமல் பூலோக நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற சகோதர, சகோதரிகளின் விட்டில் பூச்சி வாழ்க்கை முறை எல்லோருடைய மனதினையும் கனமாக்கும்.




இவற்றிக்கெல்லாம் மேலாக இங்கிருக்கும் இவர்கள் அடையும் துன்பத்தினை கண்டும் காணாதது போல் இருக்கும் நமது மாண்புமிகு தூதரகம். நம்மை நமது தூதரகமே கேட்பாரற்று இருக்கும் போது எப்படி இங்கிருப்பவர்களிடமிருந்து நல்ல எதிர் பார்ப்பது? இவ்விஷயத்தில் வெள்ளைக்காரர்கள் பாக்கியசாலிகள், இந்த வேற்றுமையை எங்கு சென்றாலும் காண முடியும். 

No comments:

Post a Comment